-ஜாவிட் ரயிஸ்
|
காதலிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. ஆனால் எப்பொழுதாவது காதலிக்கப் பட வேண்டும்; காதலில் தோற்றுப்போக வேண்டும் என்று உங்களுக்குள் நீங்களே எண்ணியதுண்டா? கால்களை சுற்றிக்கொண்ட பாம்பினை போல ஞாபகங்கள் கொடியது. இளவேனில் இரவில் சாலரங்களிநூடே நுழையும் தென்றலை போல ஞாபங்கள் இனியது.
|
|
உட்சுவாசத்தில் ஆக்சிஜன் உட்செல்வதாயும் வெளிச்சுவாசத்தில் காபனிரொட்சைடு வெளிவருவதையும் விளக்கியது விஞ்ஞானம்;
இருசுவாசத்திலும் வெளிவராமல் குருதி அணுக்களுக்குள் குந்திக்கொண்டிருக்கும் காதலை, காதலின் தேசிய மொழியாம் கவிதையில் சொல்கிறது இந்த குறும்படம்.
நான் சுவைத்தது , உங்கள் சுவை நரம்புகளையும் கொஞ்சம் தீண்டட்டும்.
ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்
தொலைதூரப் பள்ளத்தாக்குகளில்
தாழ்ந்து
மலைமுகடுகளை முத்தமிடும்
பால்நிறத்து முகில்கள்;
நிறைவேறா வேட்கைகளை
இதயத்தில் ஏந்தியபடி
தொடர்ந்தும் தொடரும் என் காத்திருப்புகள்
இந்த இளவேனிலின் சாயலில் வந்துவிடு
யாருக்கு தெரியும்,
எத்தனை காலம் இந்த காதல் தொடரும்
யாருக்கு தெரியும்,
எத்தனை காலம் இந்த துரதிஷ்டசாலியின் வாழ்வில்
சோக நிழல்கள் தொடரும்
இந்த தாரகைகள், எப்பொழுதும் போல
தூசுபடிந்து போய்விடக்கூடாது,
வா, உன் ஏக்கத்தில் விழித்திருக்கும் இந்த விழிகளுக்கு
ஓரிரவாவது உறக்கம் வேண்டும்
ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்
உருது மொழிக் கவிஞன் Sahir Ludhianvi யின் intizaar என்ற கவிதையின் 99% தழுவல். (கவிதையின் கட்டமைப்பிலும், சொற்கையாளுகையிலும் உள்ள வேறுபாட்டினாலும் 'மொழி பெயர்ப்பு' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறேன். )
-ஜாவிட் ரயிஸ்
விழிகளுக்கும் இமைகளுக்கும்
மத்தியில்
விதியின் ஊஞ்சல்...
இமைக்கும் நொடிக்குள் நூறுமுறை
ஆடி ஓய்கிறது
எதிர்பார்க்கை நூலில்
எழுந்து உயரும் பட்டம்,
அறுக்கப்பட்ட நூலோடு
நிர்வாணமாய்..
சாளரங்கள் திறந்தும்
சாலைகள் மூடப்பட்டும்;
எலிகளின் ஆட்சிக்கு மட்டுமாய்
சோபனை தெருக்கள்
வெடிகுண்டுகளோடு வரவேட்பறைகள்
வேர்களை இழந்த வேதாந்தங்கள்
சுண்டிவிடப்படும் பக்கத்துக்கு
சரிந்து விழும் சித்தாந்தங்கள்
இதழ்களில் சிரித்து
இருதயத்தில் நாண் ஏற்றும்
செயற்கை மானுடம்
களவெடுப்பவனுக்கு காலாண்டு சிறை
கண்ணீர் விடுபவனுக்கு ஆயுள் தண்டனை
கால்போன இடமெல்லாம்
காற்றுவாங்கப் போகும் சட்டங்கள்
சமுதாய சந்தையில் பொதுநலம் விற்று
சுயநலம் வாங்க வேண்டும்
தொழிலில் தேர்ந்தவர் சொன்னார்
"பொதுநலத்தை விட சுயநலத்துக்கு
கிராக்கி " இருக்கிறதாம்!
-ஜாவிட் ரயிஸ்
.
தங்கியிருந்த மழைத் துளிகள் எத்தனையோ
தன்னிச்சையாய் பிரிகையிலும்
தளராத கல் நெஞ்சு
இந்தத் துளியின் பிரிவில் மட்டும்
இடிந்து போவது ஏனோ?
௶
தவறு எங்கிருக்கிறது?
என்னிலா? உன்னிலா?
முள்ளந்தண்டு வில்லாகி
இரத்தக் குழாய்கள் நானாகி
உஷ்ணக் காற்றை நாணேற்றி
விடையில்லா
கேள்விகள் தொடுக்க...
௶
நானில்லை என்று
என் ஆணவமும்
நீயில்லை என்று
அசரீரியாய் ஒரு குரலும்
மாறி மாறி போர் தொடுக்க
கள்ளமில்லா இதயங்கள்
சல்லடையாய் உடைந்து நொறுங்க..
மயான அமைதி
மனதெங்கும் நிலைக்கிறது
௶
மீண்டும் கேள்வி!
மீண்டும் போர்!
மீண்டும் அமைதி...
மீண்டும் கேள்வி!
௶
மீண்டும் ஒரு முறை
இதயம் நொறுங்கும் முன்
விடையை தேட வேண்டும்
நிலையாமையே நிலைத்ததென்று
புரிந்துகொள்ளாதது தான்
நான் இழைத்த பிழையோ?
-ஜாவிட் ரயிஸ்
நிலவை பிரிந்து வானம் விழவில்லை;
நதியை பிரிந்து கரையும் அழவில்லை;
உன்னை பிரிந்த நான் மட்டும் ஏன்?
வண்டுக்கு மலரில் இல்லாத மோகம்;
வேருக்கு நீரில் இல்லாத தாகம்;
எனக்கு மட்டும் உன்னில் ஏன்?
௶
அனலாய் சுட்ட உன் வார்த்தைகளை
ஏன் இதயம்
சிதறாமல் சேகரிப்பது ஏன்?
தணலாய் கொதிக்கும்
உன் கோபத்தை
எட்டியிருந்து ரசிப்பதும் ஏன்?
௶
விட்டுக்கொடுக்கவும் முடியாமல்
விட்டுப்போகவும் இயலாமல் - நெஞ்சம்
தட்டுத் தடுமாறி தவிப்பது ஏன்?
எட்டிப்பிடிக்கவும் முடியாத உன்னை
கட்டிப்பிடிக்க நினைத்து - நானும்
பெட்டிப் பாம்பாய் அடங்குவது ஏன்?
௶
சுக்கு நூறாய் உடைந்த பின்னும்
சட்டென்று ஒட்டிக்கொண்டு
உனக்காய் உருகும் உயிரும் ஏன்?
வேண்டும் என்று இதயம் முனுமுனுக்க
வேண்டாம் என்று போலியாய்
அடிக்கடி உளறும் உதடுகள் ஏன்?
-ஜாவிட் ரயிஸ்