பனித்துளி - The Dew Drop
சூரியச்செங் கதிர்கள் பட்டு ஒரு பனித்துளி தன் இருப்பை உறுதிசெய்து கொள்கிறது. ஒரு இலையில் குந்திக் கொண்டு சூரியக் காதலன் அனுப்பும் பறக்கும் கதிர் முத்தங்களை சேகரித்து மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பியவண்ணம்.. தன்னை பற்றி, தன் உள்ளடக்கம் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறது. தன்னை சுற்றி இன்னும் சின்னச் சின்ன பனிக் குழந்தைகள்; சில தான் இருக்கும் அதே இலையிலும் இன்னும் சில வேறு இலைகளிலும். ஆனாலும் ஏனையவற்றை விடவும் தானே சிறப்பானதென்பதில் உறுதியாய் இருக்கிறது பனித்துளி.
ஹ்ம்ம்.. பனித்துளியாய் இருப்பது சிறந்ததே..
மெலிதாய் காற்று செடியை சீண்ட,. சீண்டலில் செடியும் குலுக்கம் காண்கிறது . என்ன அகோரம்.. காற்றின் வன்முறையில் இலையின் நுனிவரை இடம்பெயர்கிறது பனித்துளி. .
ஏன்? ஏன் இந்த கொடுமை? இருந்த இடம் சௌகரியமாய்த் தானே இருந்தது? இருந்த இடம் பாதுகாப்பாய் தானே இருந்தது? இருக்க, ஏன் இவையெல்லாம் மாற்றம் காண வேண்டும். ஏன்? ஏன்?
இலையின் நுனியில் பனித்துளி. பயங்கரமான தருணம் இது. கீழே விழுந்தால் சுக்குநூறாய் நொறுங்கப் போவது நிச்சயம். அதுவே முடிவு என்பதும் நிச்சயிக்கப்பட்ட உண்மை. இப்போது தான் அழகாய் தொடங்கியது வாழ்நாள், அதற்குள் முடிவுறப் போகிறதே! இது அர்த்தமற்ற அநியாயம். தன்னால் முடிந்தளவு இலையை பற்றிப் பிடித்துக் கொள்ள துணிவோடு முயற்சிக்கிறது பனித்துளி. ஆனாலும்.. பயனில்லை.
இறுதியில், நடப்பது நடக்கட்டும் என முடிவெடுத்ததோ என்னவோ, புவியீர்ப்பிடம் சரணடைந்தது பனித்துளி. கீழே.. இன்னும் கீழே செல்லச் செல்ல தன் விம்பம் தெரியக் காண்கிறது. தனதே தனதான ஒரு விம்பம் தன்னை நோக்கி வருவதை உணர்கிறது பனித்துளி. நெருங்க... நெருங்க...நிஜமும் விம்பமும் ஒன்றை ஒன்று சேர்கிறது.
ஹ்ம்ம்... முடிவில், சின்ன பனித்துளி குளத்தில் மூழ்கிப்போனதோடு அந்த அகோரம், பயம் இன்பமாய் பரிணாமம் பெறுகிறது. இனிமேலும் அந்த சின்ன பனித்துளி இல்லை. இல்லாமையின் எல்லையை நோக்கி அது பயனித்துவிட்டது. ஆனாலும் அது இறந்து போகவில்லை.
முழுமையான ஒரு குளத்தின் அங்கமாய் தன்னையும் சேர்த்துக் கொள்கிறது.
-ஜாவிட் ரயிஸ்
|
0 comments:
Post a Comment