தங்கியிருந்த மழைத் துளிகள் எத்தனையோ
தன்னிச்சையாய் பிரிகையிலும்
தளராத கல் நெஞ்சு
இந்தத் துளியின் பிரிவில் மட்டும்
இடிந்து போவது ஏனோ?
௶
தவறு எங்கிருக்கிறது?
என்னிலா? உன்னிலா?
முள்ளந்தண்டு வில்லாகி
இரத்தக் குழாய்கள் நானாகி
உஷ்ணக் காற்றை நாணேற்றி
விடையில்லா
கேள்விகள் தொடுக்க...
௶
நானில்லை என்று
என் ஆணவமும்
நீயில்லை என்று
அசரீரியாய் ஒரு குரலும்
மாறி மாறி போர் தொடுக்க
கள்ளமில்லா இதயங்கள்
சல்லடையாய் உடைந்து நொறுங்க..
மயான அமைதி
மனதெங்கும் நிலைக்கிறது
௶
மீண்டும் கேள்வி!
மீண்டும் போர்!
மீண்டும் அமைதி...
மீண்டும் கேள்வி!
௶
மீண்டும் ஒரு முறை
இதயம் நொறுங்கும் முன்
விடையை தேட வேண்டும்
நிலையாமையே நிலைத்ததென்று
புரிந்துகொள்ளாதது தான்
நான் இழைத்த பிழையோ?
-ஜாவிட் ரயிஸ்
.
0 comments:
Post a Comment