கண்ணீர் உற்பத்தி [கவிதை]


என் காவலனுக்கு
கண்ணீர் தாகமென்று
நடக்கிறது
என் கண்களுக்குள்
கண்ணீர் உற்பத்தி



பூவென்று புகழ்ந்தான்.
காம்பாக காப்பான் என்று
தெம்பாக வந்துவிட்டேன்
பெற்றவரின் கண்ணில்
கண்ணீர் உற்பத்தி....


கரும்பென்று சொன்னான் என்னை
கட்டிலில் துணையாக்கி
தொட்டிலும் இருக்கிறது இன்று
கட்டிலுக்கு துணையாக



பூவென்று புகழ்ந்தவன்
பசியாறி திசை மறந்தான்
வண்டென்று தெரியாமல்
தேனிழந்த பூவாய் நான்!
பூவின் கருவறையில்
கண்ணீர் உற்பத்தி

கரும்பென்று புகழ்ந்தவன்
சுவைத்து முடித்து விட்டு
சக்கையை மிச்சம் வைத்தாய்
எறும்புகளுக்கு உணவாக



படுக்கைக்கு துணையாக
பாவி நீ எதற்கு?
ஒற்றை தலையணை போதும்
விட்டில் என் துணைக்கு

தொட்டிலில் நமது உயிர்
எட்டி எட்டி பார்க்கிறது
"இவன்தான் உன்தந்தை"
என்று சொல்லும் நாளை எண்ணி
என் கண்ணீர் உற்பத்தி
ஓயாமல் தொடர்கிறது

-ஜாவிட் ரயிஸ்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More