ஒருவனுக்கு பெண் பார்க்க
ஒன்பது பேர் சேர்ந்து வந்து
வெச்ச எல்லாத்தையும்
மிச்சம் வெக்காம திண்டுபுட்டு
இல்லாத குறை தேடி
திண்ட தட்டுல போட்டுபுட்டு
வெரசா கெளம்பினாங்க
அடுத்த நேர உணவுக்காக...
பிள்ளை குட்டை எண்டு
வெள்ளை சட்டைக் காரன் சொல்ல...
உயரத்தை சமப்படுத்த
அவங்க அம்மா "தங்கம்" கேட்க
வெற்றிலை போடாமலே
கெழவி வாய் நமநமக்க
ரத்தமா ஒரு வார்த்த
சத்தமா கேட்டுருச்சி
"படிக்கிற காலத்துல
பயலுவளோட பழகினதுண்டா?"
சீமான் வீட்டு பொண்டாட்டி போல
சிங்காரித்திருந்த அக்கா
சித்தியின் காதோரம்
ரகசியமாய் வேவு பார்த்தாள்
"சொத்து எவ்வளவு தேறும்?"
கிளம்புறதுக்கு எல்லாரும்
கிணறு வரை வந்தபின்னே
ஜவுளிக்கடை காரன்
ஜாடையிலே சொல்லிப்போட்டான்
"சோடிப் பொருத்தம் திருப்தியில்ல"
வாடகைக்கு வாங்கி வந்த
வளையலோடு கனவுகளையும்
சேர்த்து
கழட்டி வெச்சு
கண்ணோரம் எட்டிப்பார்த்த
கண்ணீரை துடைக்கையில...
எங்கம்மா தலைமையில
ஒரு கூட்டம் கூடிருச்சு...
"இருக்கிற சொத்தெல்லாம்
இவளுக்கே கொடுத்துபுட்டா
அடுத்த பொட்டைகள
எவன் தலைல கட்டுறது?"
எங்கம்மா தொடங்கி விட
எங்கோ இருந்த அப்பா
தப்பாம ஆஜராகி
"ஒரு மண்ணும் கிடையாது
கொடுக்குறத வாங்கிகிட்டு
இழுத்துட்டு போறதுன்னா
சிறுக்கிக்கு கல்யாணம்
இத்தனை காலமாச்சு
நான் தானே சோறு போட்டேன்?
இங்கேயே இருந்துக்கட்டும்"
சோறு மட்டும் தான்
வாழ்க்கை என்று
நோகாம சொல்லிப்போட்டார்
"இதுக்குத்தான் சொல்றது....
நான் எண்டா
லவ் பண்ணித்தான் மணம் முடிப்பன்"
வயசுக்கே வராத என் தங்கச்சிபோல
நானும் நெனைச்சிருந்தா....
கட்டயனோ நெட்டயனோ
எவனாச்சும் வந்திருப்பான்
"வருசக்கணக்கா பூட்டியிருக்கும்
என் பெண்மையையும் திறந்து விட..."
-ஜாவிட் ரயிஸ்
0 comments:
Post a Comment