|
Diary
Page Number 3 |
|
என் நாளேட்டின் மூன்றாம் பக்கம் புரட்டப்படுகிறது. முதல் பக்கத்தில் குறைகளை மட்டுமே தேடிக்கொண்டிருந்த நான், இரண்டாம் பக்கத்தை அடையும் போது குறைகளை தவிர்த்து நிறைகளில் களிப்பதற்கு பழக்கப் பட்டிருந்தேன். மூன்றாம் பக்கம் முன்னைய இரண்டு பக்கத்திலுருந்தும் வித்தியாசப்படுகிறது. நான் அண்மையில் சந்தித்த, நான் சரியா? தவறா? என்று இதுவரை என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போன ஒரு சம்பத்தவத்தை பற்றி பேசுகிறது இந்த பக்கம்: |
|
|
|
இரவு சரியாக 10 .30 மணியிருக்கும். உறக்கத்தின் தேவை துறந்து அவசரத்தை உடுத்திக்கொண்ட
மனிதர்களை கடந்து பெயருக்கு மட்டுமே பயன்படும் "ஒரு வழிப் பாதை" வழி ஊர்ந்து டீசல் புகை மூச்சிரைக்க நான் தங்கியிருக்கும் அறையின் வாசலில் கரை தட்டியது அலுவலக வாகனம்.
இருட்டிலேயே போகிறோம், இருட்டிலேயே திரும்பி வருகிறோம். இந்த மாதமாவது சூரியனை தரிசிக்க கிடைக்காதோ? என்று நிலவை பார்த்து வெறித்தவர்களாய் நானும் நண்பனும் அறைக் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இரண்டு கால்களும் ஒன்றை குறுக்கிடுவதட்குள் இரண்டு சின்ன உருவங்கள் எங்களை வளைத்துக் கொண்டது.
ஒருவனுக்கு ஐந்து வயதும் மற்றவனுக்கு ஏழு வயதும் மதிக்கக் கூடிய சின்ன உருவங்கள். வறுமையில் புரண்ட தேகங்கள்.. அவர்களின் நீல நிற அரைக் காட்சட்டைகள் என் பாடசாலை பருவத்தை கண்முன் நிறுத்துவதாய் இருந்தது.
ஒரு கன மௌனம் சின்னவனின் உதடுகளில் வெடித்தது.
"அண்ணா, அம்மா பெத்ததுமே விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்பாவும் ஜெயில் ல ...எதாவது சாப்பிடறதுக்கு காசு தாங்க"
மீண்டும் ஒரு நிமிட மௌனம் எங்களை சூழ்ந்துகொண்டது.
"அண்ணா, அம்மா பெத்ததுமே விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்பாவும் ஜெயில் ல ...சாப்பிடறதுக்கு எதாவது சாப்பிடறதுக்கு காசு தாங்க"
கிளிப் பிள்ளை போல், மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகலை முணுமுணுத்தான் சின்னவன். தன் பங்குக்கு பெரியவனும் சேர்ந்து குரல் கொடுக்க தொடங்கினான்.
சாப்பாடு வாங்கி தரட்டுமா ? என் குரல் வெளிப்பட்டது
"வேணாம் அண்ணா, காசு தாங்க... நாங்க வீட்டுக்கு போய் வாங்கி சாப்பிடுறோம் "
சட்டென்று என் நண்பனின் கைகள் அவனது Wallet ஐ ஸ்பரிசிக்க எத்தனித்தது. அதற்குள் அவன் கைகளை என் கைகள் பற்றிக்கொண்டது.
'வேண்டாம், வா, " என்று தடுத்தேன்.
எனது செயல் சின்னவர்கள் இருவரையும் கோபமூட்டியது மட்டுமல்லாமல் நண்பனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கக் கூடும்.
நான் நடந்துகொண்ட விதம் சரியா தவறா என்பது இன்னும் எனக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்றாலும் என் மனம் ஞாயமாக சொன்னது
"இவர்களுக்கு இன்று கொடுக்க கூடிய பணம் இவர்களுக்கு பசியை போக்குகிறதோ இல்லையோ, நிச்சயம் காசு தேவை என்றால் கையேந்த வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை புகட்டும்"
என் மனது உரைத்த ஞாயம் சரியா? தவறா?
-ஜாவிட் ரயிஸ்