கனவுக் கருவறைக்குள்
கருக்கொண்டு
குறை பிரசவங்களால்
கேள்விக்குறியாய் போனது
எனது வாழ்க்கை!
◙
நான் எழுதுகிறேன்
எவனெவனுக்கோ
முற்றுப்புள்ளி வைக்கும்
உரிமை தரப்படுகிறது....
சுட்டு விரல் மட்டும்
தவறாமல்
என்னை நோக்கி!
◙
என்னில் சிக்கிருப்பதாய் கூறி
சிக்கெடுக்க வருகிறார்கள்
சீப்பில்லை-
அவர்கள் கையில்
ஏனோ கத்தி...?
◙
முக்காடிட்டு கொண்டு
எனக்கு முடிச்சு போட்டவர்கள்
இப்போது தான் - என்
பார்வை முடிச்சுக்குள்
விழுந்து இருக்கிறார்கள்
◙
என் ஓடத்தை தடுப்பதற்காய்
என் பாதையில்
சிவப்பு விளக்கை
எரிய விட்டவர்கள்
இன்னும் இருட்டுக்குள்ளேயே....
என் திரியை அணைப்பதாய் எண்ணி....
◙
இவர்களுக்கு
சிவப்பு விளக்கெரிக்க
துடுப்பை போடுகிறேன்
எனக்கான இலக்கை நோக்கி...
அதோ தூரத்தில்...
எனக்கான பச்சை விளக்கு....
-ஜாவிட் ரயிஸ்
0 comments:
Post a Comment