கவிச்சமரில் தொடங்கி கருத்துச்சமரில் முடிந்து போன ஒரு நட்பை பற்றி இன்று பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் பின்னிய கவி வலையில் அவள் இதயமும், அவள் பின்னிய கவி வலையில் என் இதயமும் சிக்கிக்கொண்டது. எம் கவி உரசலில் கருத்தரித்த உயிருக்கு நட்பு என்று பெயர் சூட்டினோம்.
முகப்புத்தகத்தின் (Facebook) பக்கங்களில் நம் நட்பு வேர்விட்டது. நாளாக நாளாக "உங்கள் சிசுவுக்கு 'நட்பு' என்ற பெயர் பொருத்தமில்லை; 'அறிமுகம்' என்பதே பொருத்தமாக இருக்கும்" என்று என் இதயம் முனங்கத்தொடங்கியது.அதற்கும் காரணம் இல்லாமலில்லை.
முதல் காரணம்:
தேநீருக்காக தான் சர்க்கரை; சர்க்கரைக்காக வேண்டி யாரும் தேநீர் குடிப்பதில்லை. அதே போல சந்தர்ப்பத்துக்கு தான் கவிதை; கவிதைகளுக்காகவே சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. சர்க்கரையை போல் தொட்டுக்கொள்வதட்காக தான் கவிதை வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
கவியரசு கண்ணதாசன் கூட முதல் இரவில் மனைவியிடம் கவிதை சொல்லப்போயிருந்தால் மறுநாள் மனைவி மூட்டை முடிச்சோடு வீடு திரும்பியிருப்பாள்.
ஆனால், என் தோழியின் கருத்தோ வேறுபட்டதாக இருந்தது.
இணையத்தில் இணைப்பை ஏற்படுத்தும் போது கூட "Hi" என்ற வார்த்தைக்கு பதிலாய் கூட ஒரு கவிதை சொல்ல வேண்டும் என்றே எதிர்பார்ப்பாள்.
இரண்டாவது காரணம்:
கவிதை எழுதுபவன் கவிஞன் என்று அகராதி விளக்கம் தரலாம். என்றாலும் கவிதை எழுத தொடங்கும் எல்லோரும் தன்னை "கவிஞன்" என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை கவிப்பிரியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதிலே தான் நான் பெருமை அடைகிறேன்.
கவிஞனுக்கு தன்னடக்கம் இருக்க வேண்டும். (இங்கு நான் கவிஞன் என்று சொன்னது கவிதை எழுதுபவன் எல்லாம் கவிஞன் என்ற போர்வையில்)
"நான் நல்ல கவிதை எழுதுவேன்டா!"
"என் கவிதையை எல்லாரும் ரசிக்கிறாங்க!"
என்று அவள் உதடுகள் அடிக்கடி முணுமுணுப்பதில் எனக்கு இஷ்டமில்லை. உண்மையில் அவள் நல்ல கவிதைகள் எழுதுவாள். என்றாலும் அந்த அழகினை ரசிப்பதை விட்டும் அவளின் "தற்பெருமை" என்னை தூரமாக்க தொடங்கியது.
கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்லும் உரிமை அதை எழுதிய கவிஞனுக்கு கிடையாது... வாசகனே அதை சொல்ல வேண்டும். இதுவே என் கருத்தாக இருக்கிறது.
கருத்து முரண்பாடுகளில் எம் உறவு கற்பிழந்து விட்டது என்றே நான் எண்ணுகிறேன். நான் பிழையா? என் கருத்துகள் பிழையா? உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்
- ஜாவிட் ரயிஸ்